என் தமிழ் சினிமா அன்று – 01 – உலக/இந்திய/தமிழ் சினிமா வரலாறு, ஒரு பார்வை


தலைப்பைக் கண்டு குழம்ப வேண்டாம். சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். என் தமிழ் சினிமா இன்று தொடரின் ஒரு கிளைத்தொடர் தான் இந்த என் தமிழ் சினிமா அன்று! இன்றைய தமிழ் சினிமா பற்றி எழுத சில தகவல்களைத் தேடப்போய் பல தகவல்கள் காணக்கிடைத்தன. So, யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 🙂
இன்றைய தமிழ் சினிமாவின் நிலையை விரிவாககப் பார்ப்பதற்கு மத்தியில் தமிழ் சினிமாவின் வரலாற்றை கொஞ்சமாகப் பார்த்து விடலாம் என்பதே இந்தப் பதிவின் நோக்கம், ஏற்கனவே பல பதிவர்கள் தங்களது பதிவுகளில் தமிழ் சினிமா வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். எனது இந்தப் பதிவு அவற்றின் சற்று விரிவான “தொகுப்பு” என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் வலையுலகில் நான் தேடிப்படித்த பல கட்டுரைகளின் உதவியுடன் இன்னும் சில விஷயங்களையும் இணைத்து இங்கு கொடுத்துள்ளேன். ஆகவே பதிவு வழக்கதைவிட மிகவும் பெரிதாக வந்துள்ளது. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். எனது இந்தப் பதிவு தமிழ் சினிமா ரசிகர்கள் பாதுகாக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நப்பாசை, பேராசை எல்லாம்! ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம் நண்பர்களே 🙂
டிஸ்கி: பதிவைப் படிக்கும் நண்பர்கள், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களில் ஏதாவது தவறு இருப்பதைக் கண்டால், உடனே தெரியப்படுத்தவும். சரியான தகவல்கள், உறுதிசெய்யப்பட்டபின் உடனுக்குடன் update செய்யப்படும்.
வரலாற்றை எழுதவது என்று முடிவாகிவிட்டது. ஏன் தமிழ் சினிமாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? உலகின் முதல் சினிமாவிலிருந்தே ஆரம்பித்து விடலாம்வ்.. எனவே ஆதியிலிருந்தே சொல்கிறேன். மேடை நாடகங்களே புகழ் பெற்று விளங்கிய காலகட்டத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்ட நகரும் படம் எது தெரியுமா? மேலே நீங்கள் பார்க்கும் இந்தப் குதிரைப் படம் தான் உலகின் முதல் நகரும் படம். எடுக்கப்பட்ட ஆண்டு கி.பி.1878. குதிரை ஓடும்போது அதன் நான்கு கால்களும் ஒரே சமயத்தில் அந்தரத்தில் இருக்குமா? என்ற கேள்வி மேலோங்க கலிபோர்னியாவின் அன்றைய கவர்னர் Leland Stanford, புகழ் பெற்ற புகைப்படக்கலைஞரான Eadweard Muybridge என்பவரிடம் அந்தக் கேள்விக்கான விடையறியும் பொறுப்பை ஒப்படைத்தார்.
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கேமராக்களில், ஓடும் குதிரையை புகைப்படமாக எடுத்த Muybridge, அவற்றை தான் கண்டுபிடித்த Zoopraxiscope என்னும் இயந்திரத்தின் மூலம் இணைத்து நகரும் படமாக மாற்றியுள்ளார். 1872 ஆம் ஆண்டிலேயே வேலை ஆரம்பித்து விட்டாலும், 1878 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் நாள் தான் Muybridge ஓடும் குதுரையைத் திரைப்படமாகக் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் காட்டியுள்ளார். ஆக, அதிகாரப்பூர்வமாக உலகின் முதல் நகரும் படம் (Motion Picture) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 133 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது! இது போல் இன்னும் பல பரிசோதனைகளை இவர் செய்து பார்த்திருக்கிறார். குதிரை ஓடும்போது எத்தனை கால்கள் அந்தரத்தில் இருக்கிறது என்பதை நீங்களே இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். என்வே இந்த Muybridge தான் உலகின் முதல் “இயக்குனர்” என்று தெரிகிறது.
Muybridgeற்கு அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் ‘ஓட’க் கூடிய படத்தை எடுத்தவர் ‘Father of Cinematography’ என்றழைக்கப்படும் Louis Le Prince. முதல் பேப்பர் பிலிம் பயன்படுத்தியவரும் இவரே. Single Lens camera மற்றும் Eastman பேப்பர் மூலம் இவர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த Roundhay Garden Scene தான் உலகின் முதல் குறும்படம்
அந்தக் குறும்படம்தான் மேலே நீங்கள் பார்ப்பது. இவரே வடிவமைத்துப் பயன்படுத்திய கேமராக்களை இன்றும் இங்கிலாந்தில் உள்ள National Media Museum வில் பாதுகாத்து வைதிருக்கின்றனர். ஆனால் 1890ஆம் ஆண்டு ஒரு ரயிலில் ஏறிய Louis Le Prince பின் இறங்கவே இல்லையாம். அதாவது காணாமல் போய்விட்டார்! இவர் காணாமல் போனதாலேயே முதல் கேமராவை, நகரும் படத்தைக் கண்டுபிடித்த பெருமை அடுத்து வந்த எடிசனுக்குப் போய் விட்டது என்கிறது வரலாறு.
உலகின் முதல் அதிகாரப்பூர்வ (Patented) கேமராவைக் கண்டுபிடித்தவர் நமது எடிசன். அதன் பெயர் Kinetograph. இதை மட்டுமா கண்டுபிடித்தார், இன்னும் பலப்பல பொருட்களை கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறார் இந்த மனிதர்.
எடிசனது ஆரம்பகால குறும்படங்கள் மேலே உங்களுக்காக. ஆண்டு 1889!
அதன் பிறகு Lumière சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட Auguste and Louis Lumière வந்தனர். இவர்களது முதல் நகரும் படம் வெளியான ஆண்டு 1895. 17 அடி நீளமான பிலிமில் இவர்களது படம் ஓடும் நேரம் 50 வினாடிகள்! Lumière தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதை படம்பிடித்துக் காட்டினார்கள். இந்த சகோதரர்கள் தான் உலகம் அறிந்த ஆரம்ப கால சினிமா இயக்குனர்கள். ‘Lumière’ என்றால் ‘வெளிச்சம்’ என்று பொருள். உலகின் முதல் வீடியோ கேமராவை கண்டுபிடித்தவர்களும் இவர்களே. ஆண்டு அதே 1895. இவர்கள் கண்டுபிடித்த cinematograph என்னும் கேமராவைக் கொண்டே இவர்களது முதல் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படத்தின் பெயர், La Sortie des usines Lumière à Lyon அல்லது ஆங்கிலத்தில் ‘Workers Leaving the Lumiere Factory
இவர்களது ஆரம்பகால படங்கள் அனைத்தையும் மேலுள்ள YouTube வீடியோவில் பார்க்கலாம்.
அந்த கால இயக்குனர்களில் தவறவிடக்கூடாதவர், Georges Méliès. இவரைப் பற்றிய படம் தான் Martin Scorsese எடுத்த படம் தான் HUGO! கருப்பு வெள்ளை பிலிம்களை கைகளாலேயே கலரடித்து, உலகின் முதல் கலர் படம் காட்டியவரும் இவரே!
உலகின் முதல் sci-fi இயக்குனரும் இவரே. இவரது ‘A Trip to the Moon (1902)’ படம் உங்களுக்காக மேலே.
இனி இந்திய சினிமா வரலாறு
Lumière சகோதரர்கள் லண்டனில் படம் எடுக்க ஆரம்பித்து போதே அவற்றை இங்கு நமது மும்பையிலும் திரையிட்டுக் காட்ட ஆரம்பித்திருந்தனர். ஆக இந்தியாவில் முதல் திரைப்படம் காட்டப்பட்ட ஆண்டு 1895. இடம் அன்றைய மும்பை. இந்தியாவின் முதல் குறும்படத்தை இயக்கியவர், Hiralal Sen, ஆண்டு 1898. அந்தப் படத்தின் பெயர் A Dancing Sceneஇந்தியாவின் முதல் விளம்பரப் படத்தை எடுத்தவரும் இவரே. 1913 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்தை முன்னிட்டே பலப் படங்களை எடுத்து வந்த இவரது படச்சுருள்கள் அனைத்தும் இவர் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்னே எரிந்து போய்விட்டதாகத் தெரிகிறது. மற்றுமொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இவர் தனது முதல் படத்தை ஒரு ஆங்கிலேயே துரையிடமிருந்து இரவல் வாங்கிய கேமராவைக் கொண்டே எடுத்துள்ளார்!
இந்தியாவில் வெளியான முதல் இந்தியப் படம் “Shree pundalik” வெளியான ஆண்டு 1912. இயக்கியவர் “இந்திய சினிமாவின் தந்தை” Dadasaheb Torne. இவர் தான் இந்தியாவின் முதல் படத்தை எடுத்தவர். ஆனால் இவரது பெயர் வெளிவராமல், இவருக்கு அடுத்து படம் எடுத்த Dadasaheb Phalke வின் பெயர் இன்றும் பிரபலமாக இருக்கிறது. சர்ச்சைக்குறிய அந்த Shree pundalik படத்தின் போஸ்டர் மேலே படத்தில்.
இந்தியாவின் இரண்டாவது மெளனப்படத்தை எடுத்தவர் Dadasaheb Phalke. அந்தப் படம் Raja Harishchandra. படம் வெளியான ஆண்டு (1913). இவர் தனது முதல் படத்தை எடுத்த விதத்தைப் பற்றி 2009 ஆம் ஆண்டு “Harishchandrachi Factory” என்னும் மாராத்தி படம் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்க்க வேண்டிய இந்தப் படத்தின் எனது விமர்சனம் இங்கே.  படம் முழுவதுமாக ஆங்கில சப்-டைடில்களுடன் YouTubeலேயே காணக்கிடைக்கிறது. இன்று இந்திய சினிமாவின் உயரிய விருதான வாழ்நாள் சாதையாளர் விருது இவரது பெயரில் தான் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த விருதை வென்றவர் நம் இயக்குனர் சிகரம், கே.பாலச்சந்தர். இதற்கு முன் இந்த விருதை வென்ற தமிழர், சிவாஜி கணேசன், ஆண்டு 1996.
Dadasaheb Phalke எடுத்த Raja Harishchandra படத்தில் தற்போது மிச்சமிருக்கும் பகுதிகள்தான் நீங்கள் மேலே பார்க்கும் வீடியோ!
இந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர், தியேட்டர் ஓனர் Jamshedji Framji Madan. ஆண்டிற்கு 10 படங்கள் தயாரித்து வெளியிட்டார் என்று தெரிகிறது.
இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான ஆண்டு 1931. படம் Alam Ara, இயக்கியவர் Ardeshir Irani. இதே ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்ட்து குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவின் மற்றுமொரு முக்கிய நபர், தெலுங்கு சினிமாவின் தந்தை, Raghupathi Venkaiah Naidu. தென்னிர்ந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக திரையரங்கு கட்டியவர் இவர் தான், இவரது நினைவாக தெலுங்கு சினிமாவின் உயரிய விருதான் நந்தி விருதுகளில் ஒரு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் முதல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. R. நடராஜ முதலியார். இவரது முதல் படம் “கீசக வதம்”, ஆண்டு 1916. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். ஆனால் இந்தப் படம் நம்மிடம் இப்போது இல்லை. கவனிக்கவும், உலகின் முதல் படமான “The Horse in Motion” இன்றும் எங்கும் காணக்கிடைக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவின் முதல் படம் இப்போது நம்மிடம் இல்லை. இந்த படம் மட்டுமல்ல இன்னும் பல நூறு ஆரம்பகாலப் படங்களின் ஒரு பிரதி கூட இப்போது நம்மிடம் இல்லை.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு முக்கிய நபர், திரு. சுவாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி ரயில்வேஸில் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், ப்ரொஜெக்டர்களையும், மொளனப்படங்களையும் வாடகைக்கு எடுத்து, ஊர் ஊராகச் சென்று கொட்டகையில் படம் காட்டியிருக்கிறார்.
முதல் பேசும் படம் தமிழகத்திற்கு வந்த ஆண்டு 1931. படம் காளிதாஸ். இயக்கியவர் H.M.ரெட்டி.. அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி மேள தாளத்துடன் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து லிபர்ட்டி தியெட்டருக்கு இந்தப் படம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் காளிதாஸ் முழுக்க முழுக்க தமிழ் படம் கிடையாதாம். படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகள் முக்கியமாக தெலுங்கில் அதிகம் பேசியதாகத் தெரிகிறது. காரணம் காளிதாஸ் வெளியாவதற்கு 45 நாட்களுக்கு முன்னரே தெலுங்கில் முதல் பேசும் படம் வெளியாகியிருக்கிறது அதாவது செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி. அந்தப் படம், ‘பக்த பிரகலாதா’. இதை இயக்கியவரும் அதே H.M.ரெட்டி தான். தயாரிப்பாளரும் இவரே. ஆக தென்னிந்தியாவின் முதல் பேசும் படம், பக்த பிரகலாதா! இந்த பக்த பிரகலாதா, காளிதாஸின் பிரதிகளும் நம்மிடம் இன்று இல்லை. ஆனால் Georges Méliès 1902 ஆம் ஆண்டு இயக்கிய ‘A Trip to the Moon’ முழுபடமும் YouTubeலேயே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முழுக்க முழுக்க தமிழ் பேசிய (actually பாடிய) திரைப்படம் 1933 ஆம் ஆண்டு வெளியான கலவா. அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி.
S.ராஜம் ராமனாக நடித்த சீதா கல்யாணம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு திரைப்படம் ஏனென்றால் சீதையாக நடித்தவர் இவரது தங்கை S. ஜெயலக்ஷ்மி, அன்று கலை தான் முக்கியமாக இருந்தது. இன்று? இந்தப் படத்தை இயக்கியவர்Baburao Phendarkar. 1930களில் பெரும்பாலும் சுதந்திர போராட்ட்த்தை முன்வைத்தே பல படங்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் M.K..தியாகராஜ பாகவதரின் முதல் படமான பவளக்கொடி வெளியான ஆண்டு 1934. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் S.D.சுப்புலட்சுமி. மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் இந்தப் படத்தை இயக்கியவர், K. சுப்ரமணியம்.
1934 ஆம் ஆண்டுவரை தமிழ் படங்களை கல்கத்தாவிலோ, மும்பையிலோ தான் தயாரித்துள்ளார்கள். அதன்படி முதன்முதலில் தமிழகத்தில் தயாரான படம் ஸ்ரீநிவாசகல்யாணம்.
குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய மற்றுமொரு முக்கிய படம் 1935ஆம் ஆண்டு வெளியான நந்தனார். இந்தப் படத்திற்கு தான் நம் அவ்வைப் பாட்டி, K.B.சுந்தராம்பாள். தனது குரு சத்யமூர்த்தி இந்தப் படத்தில் கதாநாயகன் வேடத்தில் இவரை நடிக்கக் கேட்டதற்கு நேரடியாகத் மறுக்க முடியாமல் ஒரு லட்சம் சம்பளமாகக் கேட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ஓக்.கே சொல்ல தமிழ் நாடே மிரண்டு போயிருக்கிறது. ஏனென்றால் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் பட்ஜெட் ரூ.30,000. ஆண்டு 1931. நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்த நந்தானாரில் கதாநாயகன் சம்பளம் ஒரு லட்சம்! இந்தப் படத்தின் இயக்குனர் Manik Lal Tandon. இந்தப் படம் அப்பொழுதே நான்கு மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது.
ஒரே காட்சியில் இருவர் தோன்றும் (இரட்டை வேடம்) முதல் படம் துருவா வெளியான ஆண்டு 1935.ராணியாகவும்,கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் ஒருவரே தோன்றியது இந்தப் படத்தில் தான்.
1936 ஆம் ஆண்டு ஆங்கிலேயரான Ellis R. Duncan தமிழ் படங்களை வரிசையாக இயக்கத் தொடங்கினார். இதை விட மிக்கியமாக விஷயம், அதே 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி எம்.ஜி,ஆரையும், T.S.பாலைய்யாவையும் தமிழ் சினிமாவிற்கு தந்தது. கலைவானர் N.S.கிருஷ்ணனின் இரண்டாம் படமும் இதுவே (முதல் படம் மேனகா, ஆண்டு 1935. தமிழின் முதல் சமூகப்படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு). தமிழ் சினிமாவின் முதல் காமெடியன் இவர் தான். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் சினிமாவில் காலடியெடுத்து வைத்த ஆண்டும் இதே ஆண்டு தான்.
இதே 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றுமொரு முக்கிய சம்பவம், தமிழகத்தின் முதல் பெண் இயக்குனரான T.P.ராஜலக்ஷ்மியின் மிஸ்..கமலா வெளியானதும் இதே ஆண்டு தான்.
1944ஆம் வருடம் தான் தமிழ் சினிமாவின் முதல் ஹிட் வருடம். 1944 தீபாவளிக்கு வெளியான M.K..தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடியிருக்கிறது. இதுநாள்வரை தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படமும் இதுதான். இந்தப் படத்தின் இயக்குனர் Sundar Rao Nadkarni.
M.K.Tயின் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடல் மேலே உங்களுக்காக… கூடவே தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி T.R.ராஜகுமாரியின் நடனமும்!
சுதந்திரத்திற்குப் பிறகு வெளியான படங்களில் முழு முக்கியத்துவம் பெருவது 1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா. இதன் பட்ஜெட் ரூ.30 லட்சம். இயக்கியவர், S.S.வாசன். இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றியும் பெற்ற முதல் படமும் இதுவே.
அந்த புகழ் பெற்ற முரசு பாடல் மேலே உங்களுக்காக…
1930களிலேயே பேசும் படங்கள் வந்திருந்தாலும் 1945 – 1950களில் தான் பாடல் விடுத்து, வசனத்தில் கவனம் காட்டத் தொடங்கியிருந்தனர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.  N,S.கிருஷ்ணன் – மருதம் நடித்த நல்லதம்பி 1949ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் சிறப்பு, இதன் வசனகர்த்தா, திரு.அண்ணாதுரை. அதே போல் 1950ல் எம்.ஜிஆர் – பத்மினி நடிப்பில் மந்திரி குமாரி படம் வெளியானது. வசனம், கலைஞர் கருணாநிதி. இயக்கம் R.குருஷ்ணன், S.பஞ்சு. வாராய் நீ வாராய் பாடல் உங்களுக்காக…
அதே போல் 1952 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளிவந்த மற்றுமொரு வெற்றிப் படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ் சினிமா பெற்றெடுத்த படம், பராசக்தி.
அந்த நீதிமன்ற காட்சி உங்களுக்காக.
சாதாரணமாக ஒரு படத்தில் 10 பாடல்களுக்கு குறைவில்லாமல் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம், சிவாஜி நடிப்பில் வெளிவந்த அந்த நாள். வருடம் 1954. இயக்கம் திரு.சுந்தரம் பாலச்சந்தர்.
தென்னிந்தியாவின் முதல் முளு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வெளியான ஆண்டு 1956. இந்தப் படத்தை இயக்கியவர் Modern Theatres T.R.சுந்தரம். ஆயினும் தமிழ் சினிமா கருப்பு – வெள்ளையிலிருந்து கலருக்கு முற்றிலுமாக மாற இருபது ஆண்டுகள் ஆனதாகத் தெரிகிறது.
ஒரே படத்தில் ஒரே நடிகர் அதிகபட்சமாக 9 வேடங்களில் நடித்து வெளிவந்த படம் சிவாஜியின் நவராத்திரி. ஆண்டு 1964, இயக்கியவர் திரு.  A.P. நாகராஜன். தி பேமஸ் இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் உங்களுக்காக!
இது போல் இன்னும் “முதன்முதலாக” என்று ஆரம்பிக்கும் சங்கதிகள் பல இருக்கின்றன. இந்த இடத்திற்கு(1964) பிறகு வந்த படங்களின் தகவல்களையெல்லாம் மொத்தமாக ஒரு பட்டியலாக இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இதையும் சொல்லிவிடுகிறேன். நான் இங்கு கொடுத்திருக்கும் தகவல்கள் வெறும் விக்கிபீடியா மொழிபெயர்ப்பு அல்ல. பல இணைய பக்கங்களிலிருந்தும், தமிழ் சினிமா தளங்களிலிருந்தும், திரு.பிலிம்.நியூஸ் ஆனந்தன் அவர்களது குறிப்புகளிலிருந்தும் எடுத்து நிஜமாகவே கொஞ்சம் சிரமப்பட்டு, பல மணிநேரங்களை செலவுசெய்துதான் எழுதியிருக்கிறேன். UTV தனஞ்செயன் அவர்களது ‘Best of Tamil Cinema’ புத்தகம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதுவும் இருந்திருந்தால் இன்னும் பலப்பல சங்கதிகளை புகைப்படத்துடன் கொடுத்திருப்பேன். புத்தகம் என்று கிடைக்கிறது பார்க்கலாம். இன்னும் நிறைய தகவல்கள் இணையத்தில் குவிந்து கிடக்கிறது. அவசியம் ஏற்பட்டால் அவற்றையும் எழுதி இந்தப் பதிவை முழுமையாக்க முயசிக்கிறேன், உங்கள் ஆதரவோடு!
மேலும் ஒரு சின்ன தகவல். பழைய படங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத் தருவதில் “தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்” Facebook பக்கம் முதல் இடத்தில் உள்ளது. அவசியம் இவர்கள் பக்கத்தை ஒரு அலசு அலசவும். ஆச்சரியம் நிச்சயம்!
முடிச்சாச்சு!
நான் இதுவரை எழுதியிருக்கும் 145 பதிவுகளில் இந்தப் பதிவை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். காரணம், நான் ரசிக்கும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நானே தேடித் தேடிக் கண்டுபிடித்து, ஆசை ஆசையாக எழுதியிருப்பதால் தான். என் பாட்டன், முப்பாட்டன் வரலாற்றை தேடிக் கண்டுபிடித்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைதிருப்பேனா என்பது சந்தேகம் தான். இந்தப் பதிவு பயனுள்ளதாகத் தெரிந்தால் உங்கள் வலைப்பக்கங்களில் இதைப் பகிரவும். என்ன பெருசா எழுதிட்ட என்று கேட்காதீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் கொஞ்சம் பெருசாதான் எழுதியிருக்கேன் 🙂
இந்தப் பதிவு, நான் நேசிக்கும் என் தமிழ் சினிமாவிற்கு சமர்பணம்!
தொடரும்…
Advertisements
By jeyanethiyakaljanijewellery

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s